Thursday, April 26, 2012

மனித நேயம்.....

மனிதநேயம் என்றால் என்ன? பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல்,
மற்றவர்களையும் மதித்து நடத்தல், ஏழைகளின் துன்பத்தைப் போக்குதல்,
இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் என்று சொல்லலாம்.மொத்தத்தில் கடவுளால் மதிக்கப்படும்
புண்ணியத்தை கொடுக்கிற செயல்களை செய்தல் மனித நேயம். எந்த மனிதனிடம் மனித நேயம் அதிகமாக இருக்கிறதோ அவன் உயர்ந்து நிற்கிறான். கடவுளின் கருணையை பெறுகிறான். மனிதநேய மாந்தர்கள் அதிகம் உள்ள நாடுகள் எல்லாவகையிலும் மேலோங்கி நிற்கின்றன. இந்த
நாடுகள் செல்வம், ஆரோக்கியம், கல்வி, சுகாதாரம், மற்றும் வசதிகள் எல்லாம்
நன்றாக இருக்கும். மனிதநேயம் குறைவாக உள்ள நாடுகளிலே வறுமை, நோய், பஞ்சம், பட்டினி அதிகமாக இருக்கும். மூன்றாம் தர நாடுகள் எல்லாமே
மனிதநேயம் குறைந்த நாடுகளாக இருக்கின்றன என்ற ஒரு கணிப்பை ஒரு
சமூக நிறுவனம் ஆராச்சி செய்து வரிசைப்படுத்தி ஒரு பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது. அதில் இந்தியா, சிறிலங்கா, பாக்கிஸ்தான், போன்ற நாடுகள் முறையே 136, 178, 180 என்ற இடங்களை பிடித்திருக்கின்றன. இந்த
நாடுகளிலே மனிதர்களை மனிதராக மதிக்காத தன்மையும், தாழ்ந்தோர்,
உயர்ந்தோர், ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடுகள் வெகுவாக பார்க்கப் படுகிறது.
"மக்கள் சேவையே மகேசன் சேவை" என்று சுவாமி விவேகானந்தர் சொல்லி
இருக்கிறார். இந்த மக்கள் சேவை மனப்பான்மை இந்த நாடுகளிலே இல்லை.
சுவாமி மேலும் சொல்கிறார், "கோவிலில் உள்ள விக்கிரகத்திலே கடவுளை
பார்க்கிறவன் பக்தியின் அடிமட்டத்தில் நிற்கின்றான். ஆனால் ஒரு விதவையின் கண்ணீரை துடைப்பதிலோ, அல்லது பசியோடு இருக்கும் ஒரு ஏழைக்கு உணவளித்து அவன் பசியைப் போக்குவதிலோ, பிறர் துன்பத்தை
துடைப்பதிலோ அவன் கடவுளை காண்கிறான். மேலே உயர்ந்து நிற்கின்றான்.
என்றும் சொல்லி இருக்கின்றார்.

இப்பொழுதெல்லாம் எங்கு பார்த்தாலும் கோவில்கள். புலம்பெயர்ந்து வாழும்
எம் மக்கள் மத்தியில் அவர்கள் வாழும் நாடுகளிலே ஏகத்துக்கும் கோவில்கள்
"கோவில் இல்லாத ஊரில் குடி இருக்கவேண்டாம்" என்று சொல்வது என்னவோ உண்மைதான். அதற்காக கண்ட கண்ட இடங்களிலெல்லாம் கோவில் அவசியம் தானா? கோவில் இப்பொழுது வியாபார நோக்கத்திற்காக
பல இடங்களில் இயங்குகின்றன என்ற பேச்சுகளும் உலவுகின்றன. மனிதநேய
மாந்தர்களுக்கு இந்த திடீர் கோவில்கள், அதன் வழிபாடுகள் பற்றி எல்லாம்
தெரியாது. அவர்கள் விவேகானந்தர் சொல்வதுபோல் மக்கள் சேவையே
மகேசன் சேவை என்று அதன்படி போயிற்றே இருப்பார்கள். அவர்களுக்கு
தெய்வ வழிபாடு எல்லாம் அவர்கள மனம்தான்.
               "நட்ட கல்லை தெய்வம் என்று
                நாலு புஸ்பம் சாற்றியே..
                சுற்றிவந்து முணுமுணுக்கும்..
                மந்திரங்கள் ஏதடா?..
                நட்ட கல்லு பேசுமா?
                நாதன் உள் இருக்கையில்" என்று ஒரு சித்தர் பாடல் சொல்வது இந்த
மனித நேய மாந்தர்களுக்கு பொருந்துமோ?

வாழ்க்கை முழுவதும் பிறருக்கு தீங்கும், கெடுதலும் செய்துவிட்டு,  ஆயிரம்
அன்னதானங்களும், கொடுப்பனவுகளும் , அபிஷேகங்களும், செய்வதில் 
ஒன்றும் ஆகப்போவதில்லை.  சொந்த சகோதரங்களையே ஒதுக்கிவிட்டு தீர்த்தம், திருவிழா, பூசைபுனஸ்காரம் என்று பெரிய மனித தோரணையில்
உலவுவது ஒரு பலனையும் தரமாட்டாது. கடவுள் நன்கு அறிவார்...
ஒரு சாதாரண மனிதனே புகழ்ச்சி, போலி பணிவு, என்பனவற்றிற்கு ஆளாகாமல் எந்தவித சிபாரிசுகளுக்கும் இடம் கொடுக்காமல் நியாய நேர்மையுடன் சரியான ஆட்களை தேர்ந்தெடுக்கையில், எல்லாம் அறிந்த
எல்லாம் வல்ல கடவுள் நமக்கு நன்மை அளிக்கும்போது எவ்வளவு துல்லியமாக கணக்குப்போட்டு அளிப்பார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். "தவறான ஆத்திகனைவிட, நல்ல நாத்திகனே மேல்" என்று சொல்வார்கள். நாத்திகன் கடவுளை இகழ்ந்து பேசினாலும் கடவுள் அதை
பொருட்படுத்தமாட்டார். ஆனால் வாழ்க்கையிலே பல தவறுகள் செய்துகொண்டு தினமும் மணிக்கணக்கில் தன்னை பிரார்த்தனை செய்கின்ற
தவறான ஒரு ஆத்திகனை கடவுள் தண்டிப்பார்.

ஆக, மனிதநேயத்துடன் வாழ்ந்தாலே அது கடவுளை நாம் தினமும் துதிப்பதாக 
அர்த்தமாகிறது. முடிந்தவரை கடவுளிடம் கோரிக்கை, வேண்டுகோள் வைக்காமல் 
இருப்போம். அவர் எல்லாம் அறிந்தவர். அவருக்கு எப்போது, எவ்வளவு, யாருக்கு 
கொடுக்கவேண்டும் என்பது தெரியும். மனிதநேயத்துடன் மனிதர்களாக நாம் 
வாழ்ந்தாலே போதுமானது.  

0 Responses to “மனித நேயம்.....”

Post a Comment