Saturday, January 28, 2012

சடங்குகள்...?

சடங்குகளும்,சம்பிரதாயங்களும் தமிழர்களின் வாழ்வியல் வட்டத்துக்குள் 
தவிர்க்கமுடியாதவைகள் என்பது என்னவோ உண்மைதான்.ஒருபக்கம் 
கோவில்கள்,தேவாலயங்கள் இவற்றின் உற்சவகாலங்கள்,விரதகாலங்கள்,
என்று மக்கள் ஆன்மீகத்துக்குள் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு பூஜைகள் ,
புனஸ்காரங்கள்,நேர்த்திகள்,நிறைவேற்றல்கள் என்று வருடம் முழுவதும் 
வளைய வருவார்கள்.இதைவிடுத்து,நல்ல நாள்,பெருநாள் என்று வருடத்தில் 
பல நாட்கள் வந்தவண்ணமிருக்கும்.குறிப்பாக உழவர் திருநாள்,வருடப்பிறப்பு 
தீபாவளி போன்ற பண்டிகைகள் இவற்றில் அடங்கும்.இவைதவிர கொம்புமுறி,
தேங்காய் உடைப்பு,தொழிலாளர் தினம் ஆகியவை தமிழர்களின் பாரம்பரிய 
கொண்டாட்டங்களாக விளங்கும்.
மற்றும் திருமணவைபவங்கள்,பூப்புனித நீராட்டு,என்று பல சடங்குகளும் 
தமிழர்களின் சம்பிரதாயங்கள் என்ற வட்டத்துக்குள் வருகின்றன.இவைகள் 
எல்லாம் தாயகத்தில் காலம் காலமாக இருந்துவருகின்ற, எம் மக்களால் கட்டிக்காக்கப்படுகின்ற,வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த,பிரிக்கமுடியாத 
சடங்குகளும்,சம்பிரதாயங்களும் ஆகும்.

இப்பொழுது எம்மக்களில் லட்சோப லட்சம் மக்கள் தாயகத்தை விட்டு வந்து 
உலகம் முழுவதும் பரவி வாழ்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
அத்தோடு மேற்கூறப்பட்ட அத்தனை அம்சங்களும் தமிழர்களின் அடையாளங்கள் என்பது உண்மையே.ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் 
இவற்றின் அவசியம் என்ன?இவைகளில் எல்லாம் அனுட்டிக்கப்பட வேண்டுமா? ஒரு அந்நிய தேசத்தில் இயந்திரமயமான வாழ்வியல் முறையில் 
மாற்றுக் கலாச்சார சூழலில் இந்த சடங்குகளும்,சம்பிரதாயங்களும் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டுமா? இவை அவசியம்தானா? என்பதை சற்று 
ஆராய்ந்து பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

புலத்தில் வாழும் எம் மக்களில் பலர் இன்னும் இந்த சடங்கு,சம்பிரதாயம்.
மற்றும் மூடநம்பிக்கைகள் என்று மூழ்கிபோய் இருப்பதை நாம் பார்க்கிறோம்.
ஒவ்வொரு சனி,ஞாயிறு தினங்களிலும் அநேகமானவர்களுக்கு பிறந்தநாள்,
திருமண விழா,அரங்கேற்ற நிகழ்வு,பூப்படைந்த பெண்ணுக்கு ஒரு விழா,
என்று ஏகப்பட்ட வைபவங்கள் இருக்கின்றன.ஒரு அவசரத்திற்கு,அல்லது 
ஒரு முக்கியமான விடயத்திற்கு இவர்களை சந்திப்பதென்பது முடியாத 
காரியம்.சொல்வார்கள்,"இன்று எங்களுக்கு அந்த பார்ட்டி,இந்தப் பார்ட்டி"
இருக்கிறதென்று.ஐந்து நாட்களும் இரவுபகலாக உழைத்த இவர்களுக்கு 
வீட்டில் ஆறஅமர இருந்து மகிழ்ச்சியாக குடும்பத்துடன் இருப்பதற்கும் 
முடிவதில்லை.காரணம் இந்த "பார்ட்டிகளுக்கு"இவர்கள் கண்டிப்பாக சென்றே 
ஆகவேண்டும் என்ற ஒரு நிலை இருக்கிறது.சரி அது போகட்டும்......
இந்தக்காலக் கட்டத்தில் இந்த சடங்குகள்,சம்பிரதாயங்கள் தேவையா?
ஒரு வாழ்வு கல்யாணம் என்பது மிக முக்கியமான நிகழ்வுதான்,அதை யாரும் 
மறுக்க முடியாது.எல்லா இனத்தவர்களிடமும் இந்த திருமண வைபவம் 
இருக்கிறது.ஆனால் இந்த பெண்பிள்ளைகள் வயசுக்கு வந்துவிட்டார்கள் 
என்று,அதை ஒரு சடங்காக,"சாமத்திய வீடு"என்று ஆடம்பரமாக எம்மக்கள் 
கொண்டாடுவதை நாம் பார்க்கிறோம்.இது அவசியம்தானா?என்ற கேள்வி 
இப்பொழுது எழுகிறது.

இப்போதெல்லாம் ஒன்பது,பத்து வயதிலேயே பெண் பிள்ளைகள் ஆளாகிவிடுவதை அவதானிக்க முடிகிறது.காரணம் இங்குள்ள உணவுகள் 
காலநிலை மாற்றங்கள் காரணிகளாக இருக்கலாம்.இவர்களின் உடலில் 
ஏற்படும் ஒரு மாற்றமே இந்த "பூப்படைதல்"என்று கொள்ளவேண்டும்.9 -10 
வயசு பிள்ளைகளுக்கு அதுபற்றிய செய்தியும்,அறிவும் கொடுக்கப்பட 
வேண்டியதே.இதெல்லாம் இப்பொழுது இவர்களின் பள்ளிக்கூடங்களிலே 
சொல்லித்தரப்படுகின்றது. இந்தப் பிள்ளைகளின் மன நிலை என்ன?இவர்களின் மன உளைச்சல் என்ன?என்பதுபற்றியெல்லாம் பெற்றோர் 
பார்ப்பது கிடையாது. பக்கத்து வீட்டுக்காரனுக்கோ,அல்லது பந்தாவுக்காகவோ 
தன மகளை ஒரு சோடனைப் பொருளாக்கி பெரும் எடுப்பில் பலருக்கும் 
காட்டி விடவேண்டுமென்றே விரும்புகிறார்கள்.தங்களின் பிள்ளைகளின் 
விருப்பத்தைக்கூட இவர்கள் கேட்பதில்லை என்பதுதான் கொடுமையான 
விடயம்.மேற்குலக நாடுகளில் இப்படியான நிகழ்வுகள் இல்லை என்பது 
உள்ளங்கை நெல்லிக்கனி.ஏதோ சாட்டுக்கு இது எங்கள் கடமை,உரிமை,
சம்பிரதாயம்,கௌரவ பிரச்சினை,சொந்தங்கள்,உறவுகள் குறை சொல்வார்கள்  
என்ற காரணங்களை சொல்லிக்கொண்டே இந்த "சாமத்தியவீடு"என்ற 
பெயரில் சாமர்த்தியமாக கொடுத்ததை திரும்பவும் பெற்றுக்கொள்வதட்காக
நடத்தப்படும் ஒரு விழா என்றும் பலர் சொல்கிறார்கள்.இது எவ்வளவு 
உண்மையோ தெரியாது.

அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் கூட "நீயா நானா"என்ற நிகழ்ச்சியில் இந்த பூப்புனித சடங்கு தேவைதானா என்ற கேள்வியுடன் 
ஒரு விவாதமே நடந்தது.உங்களில் பலர் அதை பார்த்திருப்பீர்கள்.அதில் 
கலந்துகொண்ட இளம் பெண்கள் இது முட்டாள் தனமானது,இந்த அறிவியல் 
காலத்தில் இது அபத்தமானது.பழைய சம்பிரதாயங்கள் என்று கூறிக்கொண்டு 
பெண்களை காட்சிப் பொம்மைகளாகவும்,கல்யாணத்திற்கும்,பிள்ளைப் 
பெற்றுக்கொள்வதற்கும் எங்கள் பிள்ளை தயாராக இருக்கிறாள் என்று 
தம்பட்டம் அடிப்பதற்கும் செய்யப்படுகின்ற ஒரு நிகழ்வுதான் இது என்று 
காட்டமாக சாடியுள்ளார்கள்.இதில் அனைத்து பெண்களும் தங்களின் எதிர்ப்பை 
தெரிவித்தார்கள்.அத்தோடு இந்த சடங்குக்கு பின்பு தாங்கள் படுகின்ற 
அவஸ்தைகள்,கேலிகள்,கிண்டல்கள்,எல்லாம் தங்களுக்கு மன உளைச்சலை 
தருவதாகவும் தங்கள் கருத்துகளை பதிவு செய்தார்கள்.அதற்க்கு எதிரணி 
பெண்கள்,இல்லை,இது எங்களின் பாரம்பரியம்,எமது கலாச்சாரம் இதை 
காலாகாலமாக செய்துவருகிறோம்.இதை மாற்ற முடியாது என்று வாதாடினார்கள்...

ஆக,இது மேற்குலக நாட்டில் வாழும் எம் தமிழ் பிள்ளைகளிடம் மட்டுமல்ல 
தமிழ்நாட்டில் இருக்கும் இளம் பெண்களிடமும் இது ஒரு வேண்டப்படாத 
சடங்காகவே பார்க்கப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் .இந்தக் 
கட்டுரை பெற்றோரின் மனதை புண்படுத்தவோ,அல்லது அவர்களின் 
செயல்களை கொச்சைப்படுத்தவோ அல்ல என்பதை தயவு செய்து புரிந்து 
கொள்ளுங்கள்.உங்கள் பிள்ளைகளின் மன நிலையை அறிந்து கொண்டு 
செயல் பட்டால் நல்லது என்பதை சொல்வதே நோக்கமாகும்...


Friday, January 27, 2012

உப்புசப்பற்ற உரையாடல்....?


 ஒரு இனத்தின் அடையாளம் அதன் மொழிதான் என்பது எல்லோருக்கும்
தெரியும்.பல அடையாளங்கள் இருந்தாலும் மொழியே ஒரு இனத்தின்
மூலாதாரம் என்றால் அது மிகை இல்லை.இந்த மொழியை பேசுவதிலும்
புரிவதிலும் கையாழ்வதிலும் எம்மில் பலருக்கு சிலவேளை பிரச்சினைகள்
எழுவதுண்டு.


அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை அழகாகப் பேசுபவர்களும்,அடுக்கு
மொழியில் பேசுபவர்களும்,அறிவார்ந்தமாக பேசுபவர்களும்,அநாயசமாக
பேசுபவர்களும்,ஆணித்தரமாக பேசுபவர்களும்,ஆக்ரோசமாக பேசுபவர்களும் எம்மில் பலர் இருக்கிறார்கள்.
இனிமையான சொற்கள்,கனிவான வார்த்தைகள்,போற்றுவதற்குரிய
எடுத்துக்காட்டுகள்,அறிவுள்ள பழமொழிகள்,ஆச்சரியப்படக்கூடிய முதுமொழிகள், காதுக்கினிய  பாடல்கள்,கருத்துச் செறிந்த உரைநடைகள்
என்று ஏகபட்ட வகையறாக்கள் தமிழ் மொழியில் இருக்கின்றனவே,,,
இவற்றை  ஓரளவிற்காவது தெரிந்து கொண்டு இருப்பதும்,பேசுவதும் நல்லதே.
நமது ஈழத் தமிழர்களின் பேச்சு சுவை மிக இனிமையானது ,இதை தமிழ் நாட்டு
தமிழ் அறிஞர்கள் கூட சொல்லியிருக்கிறார்கள்.அதிலும் வட்டார வழக்கு
பேச்சு,மாவட்டத்திற்கு மாவட்டம், பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடும்.
இதில் ஒவ்வொன்றிலும் ஓர் இனிமை இருக்கும்.யாழ்மாவட்டத்தில்
வடமராச்சிக்கும்,வலிகாமத்துக்கும் இடையில் வித்தியாசம் இருக்கும்.
வன்னிக்கும்,மன்னாருக்கும் இடையில் வட்டார வழக்கு வேறுபடும்.
கிழக்கிலே திருகோணமலைக்கும்,மூதூருக்கும் இடையிலும்,அம்பரைக்கும்
மட்டக்களப்புக்கும் இடையிலும் இந்த வட்டார வழக்குகள் வேறுபடும்.
இதுதவிர கிழக்கிலங்கை முஸ்லிம்களின் தமிழுக்கும்,கொழும்பு,கேகாலை
முஸ்லிம்களின் தமிழுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு.ஆக பேச்சு
வழக்குகள் வேறுபட்டாலும் தமிழ் கேட்பதற்கும்,படிபதற்கும் இனிமையான
மொழிதான் என்பதில் எமக்கு சிறிதும் ஐயமில்லை.


என்ன?இந்த அழகிய மொழியை சிலர் உப்புச்சப்பற்று பேசும்பொழுதுதான்
மனது தாங்கொணா துயரம் அடைகிறது.குறிப்பாக நாம் ஒரு விவாதம்,
அல்லது கலந்துரையாடல் என்று ஒரு குறித்த விடயத்தைப் பற்றி
பேசும்போது அறிவுபூர்வமாக ஆராய்ந்து பேசுவோம் இல்லையா?இப்படியான
சந்தர்ப்பங்களில் சிலர் தாங்கள் என்ன பேசுகிறோம்,பேசுவது சரியாக
இருக்கிறதா?எடுத்துக்கொண்ட கருப்பொருளுக்குள் பேசுகிறோமா?என்று
சற்றேனும் சிந்திக்காமல்,எழுந்தவாரியாக,தங்களுக்கும் எல்லாம் தெரியும்
என்ற கோதாவில் பேசுவார்கள்.அவர்கள் பேசுவது அவர்களுக்கே புரியாது .
கேட்பவர்களுக்கு எப்படி புரியம் என்ற கவலையும் அவர்களுக்கு இல்லை.
எந்த விதமான பேச்சு வழக்கிலும் இவர்கள் பேசலாம் ஆனால்,சரியான
விதத்தில் அல்லது கனத்தில் பேசுகிறோமா?என்று தெரிந்துகொண்டு
பேசவேண்டும்.எல்லாம் தெரிந்தவர் மாதிரி பேசி,மூக்கறுபடக்கூடாது.ஒரு
விடயம் பற்றி தெரியாவிட்டால் பரவாயில்லை.எல்லோருக்கும் எல்லாம்
தெரிவதில்லைத்தானே.அறியாத,தெரியாத விடயத்தை மற்றவர் சொல்ல
கேட்டு தெரிந்து தெளியலாம்.இதைவிடுத்து,தெரிந்தமாதிரி பாவனை செய்து
கொண்டு உரையாட முற்படுவது அவ்வளவு ஆரோக்கியமாக இருக்காது.
இது பல வழிகளில் சம்பந்தப்பட்டவர்களை பாதிப்புக்குள் தள்ளிவிடும்.
ஒருபோதும் இவர்களால் புதிய தகவல்கள்,நடப்புகள்,அறிவுசார் விடயங்கள்
என்பனவற்றை அறிந்துகொள்ள முடியாமல் போய்விடும்.
அறிவியல் அசுரத்தனமாக உலகில் முன்னேறிக்கொண்டிருக்கும் இந்த
காலக்கட்டத்தில் இப்படி அரைவேக்காட்டு மனிதர்களாக இருக்கத்தான் வேண்டுமா?என்பதை சிந்தித்துப் பார்த்தால்,நல்ல பயன் கிடைக்கும்.ஒரு
விடயம் பற்றி பேசுவதற்கு முன் பலதடவைகள் யோசித்துக்கொண்டு
தயார்படுத்திக் கொண்டு,அதில் கருத்தும்,கனதியும்,செறிவும்,செழுமையும்
அழகும்,ஆழமும் இருக்கிறதா?என்று தெரிந்துகொண்டு பேசமுற்பட்டால்
எல்லோருக்கும் நல்லது.அது அறிவையும்,ஆற்றலையும்,மொழிபற்றிய
மேன்மையையும் நமக்கு தரும் என்று கண்டிப்பாக நாம் நம்பலாம்.
நல்ல தமிழ் பேசுவோம்,நல்ல தமிழ் கேட்போம்.








        











Saturday, January 21, 2012

உங்கள் குடும்பம் எப்படி?


நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்,குடும்பம் ஒரு கோவில்,என்று
சொல்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்அல்லவா ?ஒவ்வொருத்தருக்கும் நல்ல கணவனோ,நல்ல மனைவியோ கிடைத்தால்
வாழ்க்கையில் கண்டிப்பாக வசந்தம் வரும்.
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"என்று சொல்வதுபோல் ஒரு பெண்ணுக்கும் கணவன் அமைவது அப்படித்தான்,
என்று கொள்ளவேண்டும்.இரு மனங்களின் சங்கமமே இல்வாழ்க்கை.இதில்
ஒரு மனம் முடங்கிப்போனாலோ,அல்லது தடம் மாறிப்போனாலோ
இல்வாழ்க்கை இருண்ட வாழ்க்கையாகிவிடும் என்பதை குடும்பமானவர்களும்,குடும்பமாக போகிறவர்களும் உணரவேண்டும்.

அந்தக் காலங்களில் காலையில் நித்திரைவிட்டு எழும்போது கடவுள்களை
வணங்காமல் கணவனையே தெய்வமாக கருதி வணங்கிய பெண்கள்
இருந்திருக்கிறார்கள்.ஆனால் தற்காலத்தில் பெண்கள் இப்படி செய்வது
இல்லை.ஒருசிலர் விதிவிலக்காக இருக்கலாம்.நாகரிக,அறிவியல் உலகில்
இது அவசியமும் இல்லைத்தான்.ஆனால் ஒரு பெண் இல்வாழ்க்கைக்கு
ஏற்ற நற்குணங்களை உடையவளாகவும்,தன் கணவரின் கஷ்ட,நஷ்டங்களில்,நல்லது,கெட்டதுகளில் பங்கெடுப்பவராகவும்,
வருவாய்க்கு தக்கபடி செலவு செய்பவராகவும் இருந்தால் நிட்சயமாக
அது நல்ல வாழ்க்கையையும்,மகிழ்ச்சியையும் தரும்.அதேபோல் கணவனும்,மனைவியின் மனம் நோகாமல்,அன்பாகவும்,ஆதரவாகவும்
தனிமனித ஒழுக்கம் கொண்டவனாகவும் இருந்தால் கண்டிப்பாக வாழ்க்கையில் நிம்மதியும்,சந்தோசமும் இருக்கும்.

எமது சமூகத்தில் தற்பொழுதெல்லாம் பல குடும்பங்களுக்குள் பிரச்சினைகளும்,சண்டை சச்சரவுகளும்,மனமுறிவுகளும் ஏற்படுவதை
பரவலாக பார்க்க முடிகிறது.இது சிலநேரம் திருமண முறிவில்கூட
கொண்டு விட்டுவிடுகிறது.பத்து,பதினைந்து வருட இல்வாழ்க்கையுடனும்
ஓரிரு குழந்தைகளை பெற்றபின்பும் இப்படியான விவாகரத்துகள்
இப்பொழுது பரவலாக இடம்பெறுகின்றன.குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எம்மவர்மத்தியில் நடக்கின்றன.இதற்கு என்ன காரணம்
எங்கே தவறு நடக்கிறது?யார் பிழை விடுகிறார்கள்?என்ற கேள்விகள்
எழும்பொழுதுதான் நாம் பலவற்றை  பதிலாக அறியமுடிகிறது.

தன்னலம்,விட்டுக்கொடுக்காதசுபாவம்,ஆணவம்,நாகரீகமோகம்,
ஆடம்பரஉச்சம்,ஊதாரிச்செலவுகள். கருத்துமோதல்கள்,ஒவ்வொருவரின்
ஒவ்வாதசெயல்பாடுகள்,பொருளாதரத்தில் தனித்து நிற்கக்கூடிய வல்லமை
போன்ற காரணங்கள் இருபாலாரிடமும் ஏற்படுகின்றபோது கருத்து
மோதல்கள் ஏற்பட்டு கடைசியில் மணமுறிவு ஏற்படும் சூழல் வருகிறது.
மேற்குலக சமூகத்தில் இதுவொரு சாதாரண விடயமாக இருந்தாலும்
எமது சமூகத்திற்கு இது ஒத்துவருமா?என்று பார்க்க வேண்டும்.பல குடும்பங்கள் பிரிந்து வாழ்வதையும்,பிள்ளைகள் வேறாக வாழ்வதையும்
பார்க்க முடிகிறது.தமிழ் கலாச்சாரம்,விழுமியங்கள் பற்றி அக்கறை
இல்லாதவர்களுக்கு இது பெரிய விடயமாக இருப்பதில்லை.ஆனால்
இந்த பண்பாட்டுக் கோலங்களில் வாழ விருப்புகிறவர்களுக்கு இது பல
விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.எப்படியான பாதிப்பு?என்று பார்த்தால்,
மனஉழைச்சல்,மன அழுத்தம்,விரக்தி,தன்னிலை மறத்தல்,இறுதியில்
தற்கொலை முடிவு என்று செல்வதை நாம் பார்க்கலாம்.

மனித வாழ்க்கை என்பது ஒரு குறுகிய காலம்தான்.இதில் ஏதோ பிறந்தோம்
வாழ்ந்தோம்,இறந்தோம் என்றில்லாமல் எப்படி வாழ்ந்தோம்,வாழ்கிறோம்,
வாழ்வோம் என்று பார்க்க வேண்டும்.அதுதான் சொல்வார்கள்,முப்பது
வயதில் ஒருவர் தன் வாழ்க்கையை திருப்பிப் பார்க்கவேண்டும்.ஏன் தெரியுமா?
ஏதாவது தப்பு பண்ணியிருக்கிறோமா?என்பதற்காக.பண்ணியிருந்தால்
திருத்த வேண்டும்.நாற்பது வயதில் மீண்டும் பார்க்க வேண்டும் தப்பெல்லாம்
சரியாகிவிட்டதா,நாம் நன்றாக வாழ்கிறோமா என்பதற்காக.அறுபது வயதில்
திரும்பி பார்க்க வேண்டும் நாம் திருப்தியாக வாழ்ந்தோமா என்பதற்காக.
அறுபது வயதில் ஜெயித்தவர்களை அணுகிக் கேட்டால் சொல்வார்கள்
தாங்கள் ஜெயித்ததற்கு காரணம் குடும்பமே என்று.குடும்பம் என்ற
அமைப்பை சிதைத்துவிட்டு எப்படி வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பது?
என்பதை சிந்தியுங்கள்.

உங்கள் கையிலேதான் வாழ்கையின் உந்துகோல் இருக்கிறது.தெரிந்து
கொள்ளுங்கள்.வள்ளுவர் அழகா சொல்லியிருக்கிறார்,
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
 தெய்வத்துள் வைக்கப்படும்" என்று..
உலகத்தில் வாழ வேண்டிய முறைப்படி இல்லறம் மேற்கொண்டு
வாழ்பவர்கள் வானுலகில் உள்ள தேவருள் ஒருவராக வைத்து
மதிக்கப் படுவார்கள். நீங்கள் எப்படி?உங்கள் குடும்பம் எப்படி?





Tuesday, January 17, 2012

கொச்சையா,பச்சையா. பேசாதீர்கள்....

தான் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் ஒரு மொழியை எங்கும்
கண்டதில்லை என்று சொன்னவன் பாரதி.தமிழ் மொழிக்கு இருக்கும் அழகும்,அர்த்தமும்,ஆழமும் வேறு எந்தமொழிக்கும் இல்லை என்பது அவனது கருத்தாக இருந்திருக்குமோ தெரியாது,ஆனால் அப்படி சொல்லி
வைத்திருக்கின்றான்.
தமிழை பலர் பலவிதமாக பேசுகிறார்கள்.தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள்
தங்கள் பிரதேசத்திற்குரிய வழக்கிலே பேசுவார்கள்.குறிப்பாக மதுரைத்தமிழ்,திருநெல்வேலிதமிழ்,கொங்குதமிழ்(கோயாம்புத்தூர்தமிழ்)
தஞ்சாவூர் தமிழ், சென்னைதமிழ் என்று ஒவ்வொரு இடத்திற்குமான
வட்டார வழக்கு இருக்கிறது. இதேபோல் சிங்கப்பூர்தமிழ்,மலேசியதமிழ்
இலங்கைத்தமிழ் என்றும் பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த இலங்கைதமிழ்
யாழ்ப்பாணத்துதமிழ்,மடக்களப்புதமிழ்,மலையகத்தமிழ்,கொழும்புதமிழ்
இஸ்லாமியத்தமிழ்,என்றும் வைப்படுத்தப் பட்டிருக்கிறது.
தமிழை எந்தப் பாணியில் பேசினாலும் அதில் ஒரு நளினமும்,அழகும்,கனதியும்
கண்டிப்பாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு அருமையான மொழியை எம்மில்
பலர் எப்படி பேசுகிறார்கள் என்பதுபற்றித்தான் இக்கட்டுரை பார்க்க இருக்கிறது

நல்ல தமிழையும்,நாடகத் தமிழையும் நாங்கள் பேசுவதை விட்டுவிட்டால்
நாளைய சந்ததிகள் எப்படி தமிழை பேசுவார்கள்?எம்மில் பலர் நாற்றத்தை
ஏற்படுத்தும் வகையில் நாகரீகமற்ற முறையில் பேசும்போது கேட்பதற்கு
நாரசமாக இருக்கும். பல குடும்பங்களில் கணவன்,மனைவிகளுக்குள்
இடம்பெறும் சண்டை சச்சரவின்போது அவர்கள் பேசிக்கொள்ளும் முறையும்,அவர்கள் பயன்படுத்தும் சொற்களும் அருவருப்பாக இருக்கும்.
மதுபோதையில் இருந்தால் கெட்ட வார்த்தைகளைக்கூட இவர்கள் சரளமாக பேசுவதை கேட்கக் முடியும்.வயசுக்கு வந்த படித்த பிள்ளைகள்
வீட்டில் இருப்பதைப்பற்றியும் இவர்களுக்கு கவலையில்லை.கீழ்த்தரமான
மூன்றாம்தர சொற்கள் கொண்டு இவர்களுக்குகிடையே நடக்கும் வாக்கு
வாதங்கள்,ஏச்சுப் பேச்சுகள் உண்மையில் அருவருக்கும் விதத்தில் இருக்கும்.கொச்சையாகவும்,பச்சையாகவும் பேசும் இவர்கள் தன்மையை
என்னென்று சொல்வது?இவர்கள் வெளியில் பெரிய புள்ளிகளாகவும்
மற்றவர்கள் மதிக்கக் கூடியவர்களாகவும் இருந்து என்ன பயன்?வீட்டில்
பிள்ளைகள் முதலில் மதிக்க வேண்டும்.
சில குடும்பங்களில் மதுபோதையில் பலர் மதிகெட்டு நடப்பது மிகவும்
கேவலமாக இருக்கும்.ஐரோப்பிய நாடுகளிலும்,கனடா,ஆஸ்திரேலியா
போன்ற நாடுகளிலும் இருக்கும் சட்டங்களுக்கு பயந்து ஒருவரும்
அடித்து துன்புறுத்துவது கிடையாது.மீறி செய்பவர்களுக்கு தண்டனை
கிடைக்கும் என்பது இவர்களுக்கு தெரியும்.அதனால் இவர்கள் அடித்து
துன்புறுத்துவதற்கு பதிலாக அசிங்கமாக பேசிக்கொண்டே வீட்டுப் பொருள்களை உடைப்பது,கார் சாவியை மறைத்து வைப்பது,கடவுச் சீட்டை
ஒழித்து வைப்பது,வங்கி அட்டையை சேதப்படுத்துவது போன்ற பல
வழிகளில் தங்களின் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கிறார்கள்.இந்த நடவடிக்கை
இருப்பதால் குடும்பங்களில் சந்தோசமும்,அமைதியும் இல்லாமல் போகிறது.
போதை தெளிந்தபின் இவர்கள் தங்கள் தவறை உணர்கிறார்களா? என்றால்
இல்லை.இவர்கள் மனிதர்களா அல்லது மிருகங்களா என்று கேட்கத்
தோன்றும்.
மற்றைய சமூகத்தினர் எப்படி நாகரீகமாக, நாணயமாக வாழ்கிறார்கள் என்று
இவர்கள் அறிந்துகொள்வதில்லையா?இல்லை வேண்டுமென்றே இப்படி
நடக்கிறார்களா?என்று புரிவது கஷ்டமாக இருக்கிறது.கல் தோன்றி மண்
தோன்றா காலத்திற்கு முன்தோன்றிய மூத்தகுடியாம் தமிழ்குடி என்று
சொல்கிறார்கள்.ஆனால் இவர்களுக்கு பின் தோன்றிய இனம்,அல்லது
சமூகம் எப்படி நாகரீகமாக இருக்கிறது.உலகில் வாழ்கிறது என்றும் இவர்கள்
அறியவில்லை என்பதுதான் பெரிய கவலையான விடயம்.
ஆக,இந்த கொச்சை,பசசையாக பேசுபவர்கள் தங்களை திருத்திக்கொள்ள
வேண்டும். இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைக் கூறாமல் கடும்
சொற்களையோ,அருவருப்பான பேச்சுக்களையோ கூறுவது கூடாது .
இதையே வள்ளுவரும் சொல்கிறார்.,
"இனிய உளவாக இன்னாத  கூறல்
  கனியிருப்பக்  காய்கவர்ந் தற்று    " இதை அறிந்து இனியாவது உங்களை
திருத்திக் கொள்ளுங்கள்.






Saturday, January 14, 2012

பொங்கலோ பொங்கல்!


நினைத்துப் பார்கிறேன்...

என் நெஞ்சம் பொங்குகிறது...

தாய்மண்ணில் பொங்கல் செய்த

தருணத்தை காலத்தை நினைக்கையிலே

மனசெல்லாம் மகிழ்ச்சி பொங்கி

மடை திறந்து பாய்கிறது...

அது ஒரு காலம் அன்று

அதை அசைபோட மனசு துள்ளுது இன்று

தைமாதம் தமிழுக்கு முதல் திகதி

அதிகாலை மண்ணிடை பரவிக்கிடந்த

பனித்துளி மெல்ல மறைவதற்கு

செங்கதிரோன் வரவை எதிர்பார்க்கும்...

காகங்கள் கரையும் சத்தம் கேட்கும்..

கால்நடைகள் போடும் சத்தம்...

வாசல் பெருக்கும் சத்தம்

கிணற்றடியில் குளிக்கும் சத்தம்

இத்தனை சத்தங்களுக்கு மத்தியிலும்

பொத்திப் போர்த்துக்கொண்டு

சுருண்டு படுக்க மனம் விரும்பும்..

அம்மாவின் எழுப்புதலுடன்..கண்விழிக்கும்..

பத்திப் பதறி படுக்கைவிட்டு எழுந்து

பரபரப்பாக சுழன்று காலைக்கடன்கள் முடித்து

பதட்டத்துடன் கிணற்று நீர் அள்ளி தலைமுழுகி

புத்தாடை புனைந்து வெளியேவர

அம்மா வெண்மணல் முற்றத்தில்

செங்கல் அடுப்பு மூட்டி புதுப் பானை அடுப்பில் ஏற்றி

பொங்கல் பொங்க தயாராக இருப்பா..

வயலிலே புதிரெடுத்த நெற்கதிர் மூன்று உடைத்து

பச்சை அரிசியில் போட்டு கலந்து

பக்குவமாய் பயறு சேர்த்து கழுவிவைப்பா அம்மா

மூன்று தேங்காய் பால்புழிந்து

அடுப்பில் ஏற்றி வைத்துவிட்டு

அதுபொங்கி வழியுமட்டும் அடுப்பையே கண்ணிவைப்பா

பொங்கல்பானை பொங்கி வழியும்போது

அரிசிக்கலவையை அள்ளி அகப்பையில் எடுத்து

பொங்கலோ பொங்கலென்று பானையில் நிறைப்பா

அரிசியும் பயறும் அவிந்து வரும்பொழுது

சர்க்கரை முந்திரி பேரிச்சை,திராட்சைவற்றல் என்று

ஒவ்வொன்றாய் இட்டு எம்மை துளாவச் சொல்லி நிற்பா

நறுமணம் கமழ நாளெல்லாம் மணக்க

பொங்கிடும் பொங்கல் பொங்கலோ பொங்கல்..

உழவர் திருநாளில் ஊரெல்லாம் மணக்க

உறவினர்க்கும் அயலவர்க்கும் பகிர்ந்துண்ட பொங்கலன்றோ

இன்னும் மணக்கிறது இதயமெல்லாம் இருக்கிறது.

நினைத்துப் பார்கிறேன் நெஞ்சமெல்லாம் நிறைகிறது..






Friday, January 13, 2012

விடியல்?


அன்பான உறவுகள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!
இந்தப் பொங்கலுடன் உலகத் தமிழருக்கு ஒரு நல்ல காலம்
பிறக்கட்டும்.அதற்காக தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன்
வேற்றுமையின்றி விழிப்பாக இருந்து உழைத்தால் விடியல்
வெகு தூரத்தில் இல்லை.ஒன்றுபடாமல் பிரிந்து கிடந்தால்
அடுத்த நூற்றாண்டில் தமிழன் என்ற ஒரு இனமே இவ்வுலகில்
இருக்காது. சிந்தியுங்கள் தமிழர்களே....

சாதி,சமயம்,உயர்வு,தாழ்வு,மேலானோர்,கீழானோர் என்ற பேதங்களை
தூக்கி எறியுங்கள்.மனிதநேயம்,மானிட விழுமியம் என்ற கோட்பாடுகளில்
உங்களை நீங்களே நன்றாக அமைந்து உங்களை
உயர்ந்த இடத்திற்கு கொண்டுசெல்லட்டும் சரியான எண்ணங்களை
தேர்ந்தெடுத்து சரியான நேரத்தில் பயணித்தால் வெற்றி உங்களுக்கு
நிட்சயம் வந்து சேரும்.

சக்தி,அன்பு,அறிவு என்பனவற்றின் வடிவமாக நீங்கள் விளங்க வேண்டும்.
ஒவ்வொரு சூழ்நிலைக்குமான திறவுகோல் உங்கள் கையில் இருக்கிறது.
ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாமல் நல்லபடி வாழ்கிறோம்
வாழ்வோம் என்று உறுதி கொள்ளுங்கள்.பணத்தில் நிறைவுகாணாமல்
மனதில் நிறைவுகாணுங்கள்.ஆர்ப்பரித்து வாழத்தேவையில்லை உங்களை
அர்பணித்து வாழுங்கள்.கோடி நாட்கள் வாழவேண்டாம்,கோடி உள்ளங்களில் வாழுங்கள்.இருக்கின்ற போது வாழ்வதல்ல வாழ்க்கை
இறந்தபின்னும் நீங்கள் வாழ வேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்
என்பதை இந்தப் பொங்கலுடன் முடிவு செய்யுங்கள்.
பொன்னித் திருநாள் உங்களுக்கு புதுப் பொலிவையும்,புதுமைகளையும்
தரட்டும். கிழக்கு வெளுக்கட்டும் தமிழ் இனத்திற்கு விரைவில் விடியல்
வரட்டும்.உலகம் விழிக்கட்டும்.

Saturday, January 7, 2012

இல்லாமல் போன இன்பங்கள்...!


புலத்திலும்சரி,நிலத்திலும்சரி நம்மவரின் குடும்பங்களில் இப்பொழுதெல்லாம் மகிழ்ச்சியும்,சந்தோசமும்,ஆரவாரமும்,அன்பும்,
பாசமும்,அழகுதமிழ் பேச்சும், இருக்கின்றனவா? என்றால் இல்லை.
மாறாக வெறுமையுள்ள உள்ளங்களும்,வெறிச்சோடிக் கிடக்கும் வீடும்
எதோ ஒருவித அமைதியும்தான் அண்டிக்கிடக்கிறது
இரண்டு பிள்ளைகள்,பெற்றோரைக் கொண்ட ஒரு அளவான குடும்பம்
என்றாலும்சரி பல அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பம் என்றாலும் சரி
இவர்களுக்கிடையே இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு இருந்த கலகலப்பும்,
சுறுசுறுப்பும், ஆனந்தமும் இப்பொழுது காணமுடிவதில்லை.இதை பலர்
சொல்ல நான் கேட்டிருகின்றேன்.சிலருடன் உரையாடியபோது,ஊரில்
வாழ்ந்தபோது இருந்த சந்தோசம் ஊரைவிட்டு வந்தபோது இல்லாமல்
போய்விட்டது என்றும் சொல்கிறார்கள்.புலத்திலே உள்ள குடும்பங்களில்
பலர் ஊரிலிருந்து தங்களின் தாய்,தந்தையரை தருவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வயது முதிர்ந்த இந்த பெரியவர்களுக்கு இங்கு மனச் சஞ்சலம் ஏற்பட வாய்ப்பு
உண்டு.ஏனென்றால் இவர்கள் ஊரில் ஓய்வு நேரங்களில் பல நிலைகளில்
பல இடங்களில் இருந்து இன்பங்கண்டவர்கள்.ஒரு முச்சந்தி,ஒரு கோவிலடி,
ஒரு வேப்பமரம்,அல்லது  ஆலமரம்,முற்றத்து மாமரம் இப்படி ஏதாவது
ஒரு மரத்தின் கீழ்  இருந்து இவர்களின் பால்ய நண்பர்களுடன் பலதையும்
பேசி பரவசமாக இருந்தவர்கள்.இவர்களுக்கு இந்த புலத்து வாழ்க்கை,புது
வாழ்க்கை ஏன் சிறை வாழ்க்கை என்றும் சொல்லலாம் பிடிக்காமல்
போகலாம்.இளம் குடும்பங்களில் ஏன் இப்படி? என்று பார்க்கும்போதுதான்,
சில தகவல்கள் தெரிய வருகின்றன.வேலையும்,வீடும் என்றிருந்தாலும்
இவர்களுக்கு பிள்ளைகள் பற்றிய அக்கறையும்,அவர்களுக்கான கடமையும்
இருக்கிறது.எல்லாம் ஒரு இயந்திரம் மாதிரி செய்து முடித்தாலும்,இவர்களிடம்
மனநிறைவோ,நிம்மதியோ,தொலைந்து போய்விடுகிறது.

வீட்டில் கலகலப்பு இல்லை,பேச்சு சத்தம் இல்லை,வீட்டில் உள்ளவர்கள்
தனித்தனியே ஏதோ செய்துகொண்டும்,பண்ணிக்கொண்டும் இருக்கிறார்கள்.
இதனால் வீட்டு தலைவியை விட தலைவனுக்குத்தான் மிக பாதிப்பும்
கஷ்டமாகவும் இருக்கிறது என்று அறியமுடிகிறது.உண்மைதான் முன்பு
அந்நியோன்யமாக இருந்த குடும்ப அங்கத்தினர் இப்பொழுது தங்கள்
வேலை,தங்கள் பிரச்சினை,என்று இருக்கிறார்கள்.ஒரு கலந்துரையாடல்,
ஒரு கருத்துப்பரிமாறல் எதுவுமே இப்பொழுது பல வீடுகளில் இல்லை.
காராணம் என்னவென்று பார்க்கும்போது தகவல்,தொழில்நுட்பத்தின் அதி
உன்னத வளர்ச்சிதான் இந்த வெற்றிடத்திற்கு வித்திட்டது என்று அறிய
முடிகிறது.

தகவல்,தொழில்நுட்பத்தின் அமோக வளர்ச்சியால் நாளுக்கு நாள் புதிய
கண்டுபிடிப்புகள்,புதிய பொறிமுறைகள்,வந்தவண்ணமிருக்கின்றன.
செல்போன் போயி,ஐ பொட்,ஐ பாட் ,வலைத்தளங்களுடன் வந்திருக்கின்றன.
முகநூல்,(FACE BOOK) தனிப்பக்கம்,(TWITTER) மற்றும் எண்ணிலடங்காத
இணையத்தளங்கள் என்று இருக்கின்றன.எல்லோரின் கைகளிலும்
விதவிதமான உதிரிகள்,மென்பொருள்கள்,இருக்கின்றன.ஒரு குடும்பத்தில்
உள்ளவர்கள் வேலை முடிந்து வந்தாலோ,அல்லது பள்ளிக்கூடம் இருந்து
வந்தாலோ இவர்களுக்கு வேலை என்ன தெரியுமா?மின் அஞ்சல் பார்த்தல்,
முகப் புத்தகம் பார்த்தல்,தனிப்பக்கம் தட்டல்,என்று மணிக்கணக்கில் செலவு செய்கிறார்கள்.இதனால் பிள்ளைகளை பொறுத்தவரை பெற்றோருடனோ,அல்லது பெற்றோரைப் பொறுத்தவரை பிள்ளைகளுடனோ அல்லது வீட்டில் உள்ள மற்றவர்களுடனோ பேசுவதோ
பழகுவதோ மிக குறைந்து போய்,பெரிய இடைவெளியே வந்துவிட்டது.
தகவல் தொழில்நுட்பத்திற்கு வசமாகிவிட்டதால் இவர்கள் தங்களை
மறந்து,மற்றோரை மறந்து,வீட்டையே மறந்துவிடும் நிலைக்கு போகிறார்கள்.வீட்டில் ஆரவாரமோ,சந்தோசமான பேச்சுக்கதைகளோ,
சிரிப்புசத்தமோ இல்லாமல்போய், ஒரு வெறுமையும்,மூதேசித்தன்மையும்
வந்துவிடுகிறது.இதில் ஒரு படி மேலே சென்று பார்த்தால் இன்னுமொரு
இடி தெரிகிறது.சிறு குழந்தைகள் கூட இப்பொழுது கணணியும் கையுமாக
ப்ளேஸ்டேசன் (PLAY STATION) என்று சொலுகின்ற விளையாட்டுடன்
உட்கார்ந்தார்கள் என்றால் எழும்பவே மாட்டார்கள்.இரண்டுபிள்ளைகள்
இருந்தால் எனக்கா,உனக்க என்று சண்டையும்,கசமுசாவும் இருக்கிறது.
இதில் ஒரு வேதனை என்னவென்றால்,ஒரு தகப்பன் ஆசையுடன் தன்
பிள்ளையை நெருங்கி செல்லம் கொஞ்சிவிட போனால்,பிள்ளையோ
"சும்மா போ,நான் ரொம்ப பிசியாக இருக்கிறேன்"என்று தகப்பனை
ஓரம் கட்டிவிடுகிறது.இது எவ்வளவோ தூரம் நாம் எமது விழுமியங்களில்
இருந்து வெகு தூரம் சென்றுவிட்டோம் என்பதை காட்டுகிறதல்லவா?
ஒரு உண்மையான பாசமுள்ள தந்தைக்கு இது மனதளவில் காயத்தை
ஏற்படுத்தும்.தாய்க்கு மனக்கவலையை கொடுக்கும்.

இந்த தகவல் சாதனைகளை கண்டபடி பயன்படுத்தும் பிள்ளைகளுக்கு
பக்க விளைவுகள் பல ஏற்பட வாய்ப்பு உண்டு என்றும் மருத்துவர்கள்
உலக அளவில் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.இதையும் நாம்
கருத்தில் கொள்ளவேண்டும்.

இப்படி இந்த தகவல் தொழில்நுட்பத்தின் தாக்கத்தினால் நமது
மக்களிடையே மகிழ்ச்சி பறிபோய்விட்டதே என்பதுதான் இந்தக்
கட்டுரையின் உள்ளார்ந்தம்.மாறாக புதிய தகவல்தொழில்நுட்பத்திற்கு
எதிராகவோ,அல்லது விரும்பாமலோ இக்கட்டுரை இல்லை என்பதை
தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.


இழந்தது ஏராளம்.....



தாய்மண்ணை இழந்தோம்,எழில் கொஞ்சும்  கிராமங்களை இழந்தோம்,
பொன்விளையும் பூமி,வயல்காட்டை இழந்தோம்,வளம் கொழிக்கும்
கடலை இழந்தோம், செந்தமிழை மறந்தோம்,தெருக்கூத்தை மறந்தோம்,
அன்பையும்,பாசத்தையும் அடியோடு மறந்தோம்,பண்பை மறந்தோம்
பண்பாட்டுக் கோலத்தை மறந்தோம்,நல்ல உணவை இழந்தோம், நல்ல உறக்கத்தை இழந்தோம், கோவில்,தேவாலய திருவிழாக்களை,அவற்றின்
உற்சவகாலங்களை இழந்தோம் இப்படி நாம் இழந்தது ஏராளம்,ஏராளம்..

இன்னும் சொல்லப்போனால் மட்டக்களப்பு தயிர்,யாழ்ப்பாணத்து  மாம்பழம்
பருத்தித்துறை வடை,களுதாவளை வெற்றிலை,மண்டூர் தண்ணீர்,கீரை,
வடமராச்சி பினாட்டு,தோலகட்டி நெல்லிரசம்,நீர்வேலி வாழைக்குலை,
மருதமுனை பாய்,பனிச்சங்கேணி நண்டு,கோரைக்களப்பு இறால்,பூநகரி,
சம்மாந்துறை அரிசி,நெடுந்தீவு,களுவாஞ்சிகுடி பனங்கிளங்கு இப்படி
சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு ஒரு
மணம் எல்லாம் இருந்ததே.அத்தனையும் இன்று நாம் இழந்தவர்களாக
அந்நிய மண் ஒன்றில் அல்லாடுகிறோம்.

முற்றத்து மல்லிகையும்,கிணற்றடி செவ்வரத்தையும்,பறித்து எங்கள்
அப்புவும்,ஆச்சியும் சாமிகளுக்கு  சாற்றியதையும்,அடுப்பில் சாம்பல்
அள்ளி அடுக்கடுக்காய் விறகு வைத்து தேத்தண்ணி பானையில் தண்ணீர்
சுடவைத்து நன்னாரி வேர்போட்டு தேத்தண்ணி குடிச்ச அம்மாவையும்
அவர் பரிமாற அப்பாவும் பிள்ளைகளும் குடித்ததையும்,வீடும்,வளவும்
கூட்டி அள்ளியபின் விரைவாக காலைச் சாப்பாடு செய்த அம்மா அவருக்கு ஒத்தாசையாக இருந்த அக்கா,தங்கச்சி, அந்த புட்டு,சொதி,சம்பல்
அமர்க்களமாக  இருக்குமே இதையெல்லாம் நாம் இன்று இழந்து நிற்கிறோம். என்னதான் பத்து பவுணுக்கோ,பத்து யூரோவுக்கோ.ஐம்பது
டொலருக்கோ,அல்லது நூறு குரோணருக்கோ நூறு இடியப்பம்,சொதி
சம்பல் வாங்கினாலும் நம்மஊரு,நம்ம வீட்டு புட்டு இடியப்பத்துக்கு
ஈடாகுமா?இல்லவே இல்லை. சும்மா சொல்லக்கூடாது நாம் இழந்தது
ஏராளமே.

மண்வாசத்தை இழந்தோம்.மனைகளிலே இருந்த மங்களத்தை இழந்தோம்
பொண்ணுகளின் பேச்சு சுவையை இழந்தோம்,ஆண்களின் உழைப்பையும்
வீரத்தையும் இழந்தோம்,கோழி கூவலையும்,காகம் கரைவதையும்,மாடு
கத்துவதையும்,ஆடு கனைப்பதையும்,குயில் கூவுவதை,மயில் ஆடுவதை
சூரியன் உதிப்பதை,நிலவு காய்வதை, கடல் இரைவதை இப்படி
எத்தனை இன்பங்களை நாம் இழந்துவிட்டு இன்று இந்த இயந்திர வாழ்வில் மாட்டிக்கொண்டு உழலுகின்றோம்.

என்னதான் வெளிநாட்டு  வாழ்க்கை,என்றாலும் எமது மனங்களில் முன்பிருந்த மகிழ்ச்சி இருக்கிறதா என்று எங்கள்  மனச்சாட்சியை
கேட்டுக்கொள்வோம் .மகிழ்ச்சியாக இருந்தால் சந்தோசம்.அல்லது நம்
மகிழ்ச்சியை நாமே  தேடிக்கொள்வோம்.எப்படித்தான் என்றாலும் நாம்
இழந்தது ஏராளம் இலையா?





Wednesday, January 4, 2012

முதற்காதல் அழிந்துபோவதில்லை...

என்றோ பழகியவன்  நீ..

எழில் மிகு எமது கடற்கரைகளிலும்....தென்னம்

பொழில் சூழ்ந்த ஊர் முழுவதிலும்

என்னுடன் சுற்றித்திரிந்தவன் நீ....

உன்னுடன் அன்பை விதைத்தவள் நான் ....

என்னைவிட்டு பிரிந்து..

பலப்பல வருடங்கள் சென்றபின்

மீண்டும் கண்டேன்..நினைவுகள் வந்தன...

அன்று காதல் மொட்டாகி மலரானது..

எனக்குள் மட்டுமே..

எட்டாத தூரத்திற்கு உன்னை

ஏற்றிச் சென்றது விதி...

நான் எங்கு சென்றாலும்

எப்படி வாழ்ந்தாலும் என்னைவிட்டு

பிரியாமல்  உன் நினைவு....

உனக்கு ஒரு உறவு வந்தபின்

என்னை நான் மாற்றிக் கொண்டதாக

எப்பவோ நினைத்துக் கொண்டேன்.

அது பொய் என்று இன்று

 புரிந்து கொண்டேன்..
.

உன்னை முதலில் நான் பார்த்தபோது

ஏக்கம் என் மனதில் தோன்றியபோது..

வாய்மொழி இன்றி...

பார்வையால் கதைபேசும் கண்களும்

பல் தெரிய பலரையும்

கவர்ந்திழுக்கும் உன் சிரிப்பும்தானே

என்னை,உன்னை நினைக்க வைத்தது.

இன்றும் அவைகள் உன்னுடன்...

உற்று உற்று பார்த்தேன்

உன்னிடம் மாற்றம் ஏதும் உண்டா என்று...

இல்லை..அன்றுபோல் இன்றும் நீ அப்படியே..

உனக்கென ஒருத்தி உறவாய் வந்தபின்பும்

உன் கண்கள் ஏன் இன்னும் என்னுடன்

கதை பேசுகிறது....காரணம் என்ன ?

என் கண்களில் காதலா?

இல்லை உனக்குள் இன்னும் காதலா?

உண்மை எதுவாக இருந்தாலும்

நீ  இன்னொருத்தியின்  அவன் ...அதனால்

எட்டவே நிற்கும் என் காதல்

உன்னை  சுற்றி....

என்னால் முடிந்தவரை ..

உனக்கு தொந்தரவின்றி...

முதற் காதல் அழிந்துபோவதில்லையோ!









காதல்..வாழ்வதற்கா? வழுக்கி வீழ்வதற்கா?


காதல் புனிதமானது.அது தெய்வீகமானது.காதலுக்கு கண்ணில்லை.
காதலுக்கு சாதி,மத,சம்பிரதாயங்கள் இல்லை.இவ்வாறு பலவிதமாக
காதல்பற்றி சொல்லபடுகின்ற பேச்சுகளை நாம் கேட்கிறோம்.ஆனால்
தற்காலத்தில் காதலித்து கடைசிவரைக்கும் கல்யாணம்வரை செல்லும்
காதலர்கள்,அல்லது பெற்றோரை சந்தோசப்படுத்தி,அவர்களின் ஆசியுடன்
கல்யாணம் செய்துகொள்ளும் காதலர்கள்,தங்களுக்கு பொருத்தமான
ஆண்மகனா,அல்லது பெண்ணா என்று பார்த்து மனசை பறிகொடுக்கும்
காதலர்கள் நமது சமூகத்தில் இருக்கிறார்களா?என்பதுபற்றியும்,குடும்ப
தகுதி,சாதி,சமயம் பார்க்கும் பெற்றோர்கள் காதல் என்று வரும்போது
அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையில் இருக்கிறார்களா?என்று
பார்க்கலாம்.

முதலில் காதல்தற்காலத்தில்மட்டுமல்ல கற்காலத்திலும்இருந்திருக்கிறது.
எக்காலத்திலும் காதல் இருக்கும்.மனித இனத்தில் மட்டுமா காதல்,
இருக்கிறது,மரம்,செடி,கொடிகள்,பறவைகள்,மிருகங்கள் கூட காதல்
செய்கின்றன.ஏன் கடவுள்கள்கூட காதல் செய்திருக்கிறார்கள் என்று நாம்
புராண,இதிகாச,காப்பியங்களில் இருந்து அறிகின்றோம் அல்லவா? இது
உண்மையா,என்பதை உங்களிடமே  விட்டுவிடுகின்றேன்.ஆனால்
படித்திருக்கிறோம் இல்லையா? இந்தக் கடவுள்களின் காதல்களுக்குள் நாம்
போகவேண்டாம்.
காதல்..காதல்..காதல்!காதல் இல்லையேல் சாதல் என்று கூறிய பாரதிகூட
காதலின் மகத்துவத்தை உலகிற்கு சொல்லிச் சென்றான்.இந்தக் காதல்
எந்த பொழுதிலும்,எந்த சூழ்நிலையிலும்,எந்த தருணத்திலும் வரலாம்.இந்த
காதலுக்கு எதிரானவர்கள் அந்தக்காலத்திலும் இருந்திருக்கிறார்கள்,
இந்தக்காலத்திலும் இருக்கிறார்கள்.அந்தக் காலத்திலே பேசப்பட்ட காதல்களாக நாம்,அம்பிகாபதி அமராவதி,சலீம் அனார்கலி,லைலா மஜ்ஜுனு,சஜஹான் மும்தாஜ் போன்ற காதலர்கள் பற்றி படித்திருகின்றோம்.இவர்களும் காதல் மறுக்கப்பட்டவர்களே.ஆனால்
இன்றுவரை பேசப்படுகின்றது.காரணம் அது உண்மைக் காதல்கள்.

இப்படிப்பட்ட தெய்வீகத் தன்மைகொண்ட காதலை இப்போதெல்லாம்
பலர் கொச்சைபடுத்தியும்,பொழுதுபோக்குக்காகவும்,இனக்கவர்ச்சி,
வயதுக்கோளறு,போன்றவற்றில் நாட்டம் கொண்டு காதலித்து பின்பு
கைவிட்டு விடுகிறார்கள்.இது இருபாலரிடமும் நடக்கிறது.இதனால்
பாதிக்கப்பட்டவர் மனமொடிந்து,தற்கொலை செய்துகொள்வதுண்டு அல்லது
மனநிலை பாதிக்கப்பட்டு ஒரு நடைப்பிணமாக வாழ்வதுமுண்டு.
"பாத்திரமறிந்து பிச்சைபோடு கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு" என்ற
சொல்லாடலை இன்றும் சிலர் பின்பற்றுகிறார்களோ என்று எண்ணத்
தோன்றுகிறது.தாய்நாட்டில் இருந்தபொழுதுதான் இந்த சாதி,மதம்,குடி,
கோத்திரம் என்று இருந்தார்கள் என்றால் புலம் பெயர்ந்துவந்து இந்த
மேற்குலகில் வாழ்ந்தாலும் இவர்கள் பாழாய்ப்போன இந்த சாதியை
விடுவதாய் இல்லை.ஒரு மனிதன்,அல்லது ஒரு சமூகம் செய்யும் தொழிலைக் கொண்டு வகுக்கப்பட்ட இந்த சாதி என்னும் சாத்தான் இன்னும் சாகாமலே இருக்கிறான்.என்னதான் விசுவாசமாக இருப்போம்
என்று நினைத்தாலும் நம்மை அவிசுவாசமாக்க இந்த சாதி என்ற சாத்தான்
முனைப்பெடுப்பான்.

ஆண்,பெண் இருபாலாரும் காதல் வயப்படுதல்,மனதைப் பறிகொடுத்தல்
எல்லாம் அவர்கள் மனசைப் பொறுத்தது.ஆனால்  மனசை கொடுப்பதற்கு
முன்பதாக தங்கள் குடும்பம்,பெற்றோர்,உறவுகள் பற்றியும் இவர்கள்
சிந்திக்க வேண்டும்.குறிப்பாக பெற்று, வளர்த்து,படிப்பித்து ஆளாக்கிவிட்ட
தாய்,தந்தையை மகிழ்ச்சிப்படுத்தி,அவர்கள் மனம் கோணாமல் பார்ப்பதே
பிள்ளைகளின் தலையாய கடமையாகும்.சில பிள்ளைகள் இதில் கவனமாக
இருக்கிறார்கள்.சிலர் தவறிவிடுகிறார்கள்.
காதலுக்கு பல பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள். சிலர் எதிர்ப்பு  தெரிவிக்கலாம்.அதனால் காதலிக்கமுன் ஒரு காதலனோ,அல்லது காதலியோ தனக்கும்,தங்கள் குடும்பத்திற்கும்,தங்கள் குடும்ப பின்னணிக்கும் ஏற்றவரா?எல்லோராலும் விரும்பப்படக் கூடியவரா?என்று
நன்றாக சிந்தித்து காதலிக்க தொடங்கலாம்.எனக்கு புரிகிறது "என்னடா
பயித்தியக்காரத்தனமாக இருக்கிறது.காதல் என்பது இதையெல்லாம்
பார்த்தா,கேட்டா வரும்"என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.ஆனால் இது
தற்காலத்திற்கு மிக அவசியமாகிறதே.ஏன் காதலிப்பவர்களுக்கும் இது
முக்கியமாகிறது என்று சொல்லலாம்.
இப்போதெல்லாம் காதலிக்க முன்னரே பலர் தங்களை பல கோணத்தில்
தயார்படுத்திக் கொள்கிறார்கள்.இவர்கள் பாசையில் சொல்வதானால்
"இருவருக்கும்  இடையில் கெமிஸ்ட்ரி வொர்கவுட் ஆகுமா?லைப் ஸ்டைல்
ஒத்துவருமா?ஈக்குவல் ஸ்டேட்டஸ் இருக்கிறதா?புரிதல்,தன்னலம்
இவைகள் பற்றிய தெளிவு இருக்கிறதா?என்றெல்லாம் விலாவாரியாக
ஆராய்ந்து அறிந்துகொண்டபின்பே காதலிக்க முடிவெடுக்கிறார்கள்.பின்பு
பெற்றோரிடம் சொல்லும்போது இது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் ,
சந்தோசத்தையும்,வெற்றியையும் கொடுக்கிறது.நல்ல சம்பந்தம்,நல்ல
குடும்பம்,நாம் பார்த்து பேசி செய்தாலும் இப்படி அமையாது என்று சொன்ன பெற்றோர்களை நாம் அறிவோம்.
சில பிள்ளைகள் இப்படி முன்யோசனையின்றி வழுக்கி வீழ்ந்து,தங்கள்
குடும்பத்துக்கு ஒத்துவராத பின்னணியில் ஒருவரை விரும்பி,அதை
தங்கள் பெற்றோரிடம் கூறும்போது பிரச்சினை உருவாகிறது.பெற்றோர்
அதை மறுக்கும்போதும்,எதிர்க்குபோதும்,மனதை மாற்றிக்கொள்ள முடியாமல்,பெற்றோரை எதிர்த்து தாங்களே பிரிந்து சென்று மணம்
முடிக்கும்போது பெற்றோர்மனம் என்னபாடுபடும் என்பதை இவர்கள்
நினைக்க வேண்டும்.இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர் மனமொடிந்து
நோய்வாய்பட்டு கடைசியில் காலனை அணைக்கும் நிலையும் வரும்.
இந்த அசம்பாவிதங்களை,அசௌகரியங்களை காதல் செய்பவர்கள்
ஏற்படுத்தக் கூடாது.இப்படி செய்வதால் பெற்றோரையும் கஷ்டப்படுத்தி
நாளடைவில் இவர்கள்  தங்களையும்  கஷ்டத்துக்குள் ஆக்கிவிடுவார்கள்.
என்பதை இவர்கள் உணரவேண்டும்.ஆக,காதலர்களே! கேளுங்கள் !!

காதலிப்பது தப்பில்லை.காதல்தான் வாழ்க்கையின் வசந்தம் ஆனால்
காதலிக்கப்படுபவர் உங்களுக்கும், உங்களின் குடும்பத்திற்கும் பொருத்தமானவரா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் என்பதே
இக் கட்டுரை உங்களுக்கு சொல்லும் செய்தி என்பதை உள்வாங்கி
கொள்ளுங்கள்."காதல் என்பது எதுவரை கல்யாணக் காலம் வரும்வரை"
என்றில்லாமல் கல்யாணத்திற்க்குப் பின்பும் காதலியுங்கள்.அப்பொழுது
காதலின் புனிதத்தை நீங்கள் உணரலாம்.